
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள வெப் சீரிஸ் 'செங்களம்'. இந்த தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், மானஷா ராதாகிருஷ்ணன், ஷாலி நிவேகாஸ், பக்ஸ், முத்துக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் கடந்த வாரம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது. ட்ரைலர் ரிலீஸின் போதே மக்கள் மத்தியில் தனிக்கவனத்தை ஈர்த்த இத்தொடருக்கு, தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சரி, வாங்க இத்தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.

குடும்ப அரசியல்:
விருதுநகர் நகரத்தின் உள்ளாட்சி அரசியலை தன் கைக்குள் வைத்துக் கொண்டு தொடர்ந்து 40 ஆண்டுகளாக நகராட்சி தலைவர் பதவியை வகித்து வருகிறது சிவஞானத்தின் குடும்பம். சிவஞானத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய மூத்த மகன் ராஜமாணிக்கத்தை சேர்மனாக்குகின்றனர். கடந்த 10 வருடமாக சேர்மனாக இருக்கும் ராஜமாணித்தின் மூத்த மனைவி இறந்து விட, திருமணமே செய்யாமல் பல ஆண்டுகளான தனிமரமாக வாழ்ந்து வந்த இவருக்கும் சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது.

எதிர்பாராத திருப்பங்கள்:
ராஜ மாணிக்கமும் சூர்யகலாவும் கொடைக்கானல் மலைக்கு ஹனிமூன் செல்லும்போது, விபத்து ஏற்படுகின்றது. இதில், ராஜ மாணிக்கம் உயிரிழக்கிறார், சூர்யகலா பிழைத்து கொள்கிறார். அடுத்த நகராட்சி மன்ற தலைவர் யார் என அனைவரும் கேட்க, உயிரிழந்த தன் மகனின் மனைவி சூர்யகலாவை தேர்தலில் நிற்க வைத்தால் ‘சிம்பதி’ ஓட்டு பெறலாம் என திட்டம் தீட்டுகிறார், சிவஞானம்.

ஒருவழியாக சூர்யகலா தனது தோழி நாச்சியாருடன் இணைந்து சில தந்திரங்கள் செய்து தேர்தலில் வெற்றி பெற்று விருதுநகரின் நகராட்சி தலைவர் ஆகிறார். ஒரு சில வருடங்களில் குண்டு வீச்சில் சூர்யகலா கொல்லப்பட்டு விட, தோழி நாச்சியார் கவுன்சிலர்களை வளைத்துப் போட்டு நகராட்சி தலைவர் ஆகிறார்.

சூர்யகலாவின் கொலையின் பின்னணியில் இருப்பது தனது தங்கை நாச்சியார்தான் என்பதை கண்டுபிடிக்கிறார் அண்ணன் ராயர் (கலையரசன்). இன்னொரு எபிசோடில், விருதுநகர் மாவட்டத்தில் தனது தம்பிகளின் துணையுடன் 3 கொலைகளை செய்துவிட்டு தம்பிகளுடன் தலைமறைவாக இருப்பவர் ராயர், இவர்களை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கியுள்ள போலீசிடமே இன்னும் 2 கொலைகளை செய்ய உள்ளதாக சவால் விட்டு கொலையும் செய்துவிடுகின்றனர்.

அமர்களமான செங்களம்:
முதல் 3 எபிசோட்கள் மெதுவாக சென்றாலும் சூர்யகலாவின் அரசியல் என்ட்ரி தந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. சக்ரநாற்காலியில் உள்ள சிவஞானத்தை பார்க்கும் போது தமிழ் நாட்டில் மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் (கலைஞர்) உங்கள் நினைவுக்கு வரலாம். மேலும், சூர்யகலா - நாச்சியார் தோழிகளை பார்க்கும் போது தமிழக அரசியலை கலக்கிய உடன் பிறவா சகோதரிகள் (ஜெயலலிதா - சசிகலா) உங்கள் நினைவுக்கு வரலாம்.

அதேபோல், வேறு எந்த சக அரசியல் தலைவரும் இல்லாமல் மேடை வெடித்து சூர்யகலா கொல்லப்படும் போது தமிழ் நாட்டின் வரலாற்றில் மோசமான பக்கமான ஸ்ரீபெரும்புத்தூர் நம் கண் முன் வருகிறது. இப்படி, ஒரு சிறிய நகரத்தின் உள்ளாட்சி அரசியலை வைத்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து தற்போது நிகழும் அரசியல் நிலவரம் வரை நம் கண் முன் காட்டி வெற்றி பெற்றுள்ளார் டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

மேலும், விருதுநகரின் அழகு, காடு, மலை, கரிசல்காடு என அனைத்தையும் அழகாக காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவியும் பவரும் எவ்வளவு பெரிய போதை என்பதை அப்பட்டமாக கூறியதற்காக டைரக்டரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
Nandhinipriya Ganeshan March 31, 2023 & 12:51 [IST]